மாநில சுயாட்சி உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu CM Stalin formed committee for State autonomy: திமுக அரசு பதவியேற்றது முதல் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. மாநிலங்களிடையே தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரும் மத்திய பாஜக அரசு, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஒதுக்கி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது, திட்டங்களை கொண்டு வருவது என மத்திய அரசு பாராமுகமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி
திமுகவை பொறுத்தவரை மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. நீட் விவகாரம், மொழிக் கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், என மத்திய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக இருக்கும் நிலையில், திமுக அரசு இதற்காக போராடி வருகிறது. இந்நிலையில், மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மாநில பட்டியலில் கல்வி வர வேண்டும்
தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ''மருத்துவ கொள்கையை நீட் தேர்வு நீர்த்துபோக செய்துள்ளது. பொதுக்கல்வி முறையை நீட் தேர்வு எதிர்க்கிறது. நீட் தேர்வு காரணமாக பல மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்துள்ளது. இதனால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வர இன்றியமையாததாக உள்ளது. மும்மொழி கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. மாநில பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை மத்திய அரசு மடைமாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறது'' என்றார்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.44.50 கோடியில் பிரமாண்ட விடுதி! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாநில உரிமைகள் பறிப்பு
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ''மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டியை கொண்டு வந்தபோது எதிர்ப்பு நிலையிலேயே தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசின் ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து வருகிறது'' என்றார்.
திமுகவின் முழக்கம் இதுதான்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கொண்ட நாடாகதான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழங்கி வருகிறது. ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கலைஞர் அமைத்தார். இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை இந்த சட்டப்பேரவையில் தீர்மானமாக கலைஞர் நிறைவேற்றினார்'' என்று கூறினார்.
குரியன் ஜோசப் தலைமையில் குழு
மேலும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், ''மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது. மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். குரியன் ஜோசப் குழு வரும் ஜனவரியில் இது தொடர்பாக இடைக்கால அறிக்கை அளிக்கும். 2 ஆண்டுகளில் இந்த குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்'' என்று தெரிவித்தார்.
இந்த குழுவில் யார் யார் உறுப்பினர்கள்?
மாநில சுயாட்சியை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்டக்குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் செட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின், உதயநிதி வீட்டில் விரைவில் ரெய்டு உறுதி.! அடித்து சொல்லும் அதிமுக