
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை, எம்சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து உயர்கல்வி பயில சென்னைக்கு வருகை தரும் ஆதிரிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கிக் கல்வி பயில ஏதுவாக சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட விடுதியில் தற்போது வரை 25000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் 2022 - 23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை, எம்சி ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பபட்டது.
அதன்படி தரை தளத்துடன் 10 தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கூடிய 121 அறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.44 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.