மே 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவடைந்த நிலையில் வினாத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அறிவித்திருந்தார். மே 7-ல் நீட் தேர்வு நடப்பதால் முதல்வருடன் ஆலோசனை செய்து புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : பிரிஜ் பூஷன் சரன் சிங் மீதான பாலியல் புகார்: உடற்பயிற்சி செய்து கொண்டே மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
திட்டமிட்டபடி மே 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்றும், எனவே மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் மாற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மே 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மே 7-ம் தேதி நீட் தேர்வு நடப்பதால், மே 5-ம் தேதிக்கு பதில் மே 8-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
முன்னதாக இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுக்கு சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்செண்ட் ஆகினர். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆப்செண்ட் ஆன மாணவர்களை துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகாவில் கலவரம் ஏற்படும்.. அமித்ஷா பேச்சு..