தமிழக பட்ஜெட்டில் 3,000 புதிய பேருந்துகள் மற்றும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் பன்முகப் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில்: தமிழ்நாட்டில் கடைக்கோடி குக்கிராமங்களுக்கும் தேவையான, தரமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவையினை தொடர்ந்து வழங்கிட இந்த அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் நிதியாண்டில் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட 1031 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டிற்கு உகந்த 750 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை! பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!
பெருநகரங்களில் காணப்படும் காற்று மாசுபாட்டினைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னை மாநகரத்திற்கு 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூர் மாநகரத்திற்கு 75 மின் பேருந்துகள், மதுரை மாநகரத்திற்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
பெருகி வரும் நகரமயமாதலில் மிக முக்கியமான தேவையாக பேருந்து புறநகர் இரயில்வே மற்றும் மெட்ரோ இரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகளை ஒருங்கிணைக்கும் முனையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் இவற்றை ஒன்றிணைக்கும் பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று, கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயணியருக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படும். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் இதேபோன்று பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று நவீன பயணியர் வசதிகளுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜாக்பாட் அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள்!
அதேபோல் கடந்த 1997ம் ஆண்டில் கருணாநிதியால் அறிமுகப்படுத்திய சிற்றுந்து திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்றைப் பெற்றது. தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகர்ப்புரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்து சேவையை வழங்கிடும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சுமார் 2,000 வழித்தடங்களில் சிற்றுந்துத் திட்டம் தமிழ்நாட்டில் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.