தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் அபாயம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற மாநில முதலமைச்சர்களு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Joint Action Committee meeting : மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக மக்கள் தொகை பெருக்கத்தை பெரும் அளவில் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதியானது குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 39 தொகுதியில் இருந்து 31 தொகுதியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உரிமைகளை பெறமுடியாத நிலை உருவாகும். மேலும் வட மாநிலங்களில் ஏற்கனவே அதிகமான தொகுதிகள் உள்ள நிலையில் மேலும் அதிகரிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தொகுதி மறுவரையறையை எதிர்கொள்ளவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் கூட்டு நடவடிக்கை குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுக்கும் எதிர்கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
தென் மாநில முதல்வர்களை சந்திக்கும் அமைச்சர் குழு
மேலும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் வருகிற 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவக்குமார்ர தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது.
பினராய் விஜயனோடு பிடிஆர் சந்திப்பு
இந்த நிலையில் இன்று சென்னையில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு இன்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்து முதலமைச்சரின் அழைப்பை வழங்கியது. இதனை ஏற்றுக்கொண்ட பினராய் விஜயன் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டார்.