உணவு கிடங்குக்காக ஒதுக்கிய ரூ.309 கோடி மாயம்..! திமுக அரசு மீது அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

Published : Nov 18, 2025, 04:01 PM IST
Annamalai vs MK Stalin

சுருக்கம்

நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ஒதுகப்பட்ட 309 கோடி ரூபாய் நிதி எங்கே சென்றது? என திமுக அரசுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நாளை நடைபெற உள்ள தென்னிந்தியா இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், நெல் ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக தளர்த்துவதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். தற்போதுள்ள 25 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி தானியங்களின் மூட்டை அளவை 50 கிலோவாக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலினின் ஏமாற்று வேலை

இந்த நிலையில், நெல் பாதுகாத்து வைக்க உணவுக் கிடங்குகள் அமைக்காமல், பிரதமருக்கு கடிதம் எழுதி முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ரூ.309 கோடி நிதி எங்கே?

கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி? நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம்.

யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?

இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு. கடந்த ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?

அரசின் ஊழலால் விவசாயிகள் துன்பம்

திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல. தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு?'' என்று கூறியுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்