
தமிழகத்தில் SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. SIR என்னும் பெயரில் பாஜக அரசு மக்களின் வாக்குரிமையை தடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோரும் SIR பணிகளுக்கு எதிராக உள்ளனர்.
SIR பணிகளுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், SIR பணிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீமான், இதனால் தனது வாக்கே பறிபோய் விடும் என்று புலம்பித் தீர்த்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''தமிழகத்தில் பல காலமாக போலி வாக்காளர்கள் உள்ளனர். ஏதோ இப்போது மட்டும் போலி வாக்காளர்கள் உள்ளதுபோல் SIR பணிகளை செய்வது ஏன்?
பீகாரை போல் தமிழகத்திலும் தங்களுக்கு வாக்களிக்காத ஓட்டுகளை நீக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு வீட்டின் வரவேற்பரையில் என் படம் இருந்தால் அந்த வீட்டில் இருக்குமா? இதேபோல் தம்பி விஜய்யின் படம் இருந்தாலும் அந்த வீட்டில் ஓட்டு இருக்காது. நீக்கி விடுவார்கள். SIR பணிகளுகாக திமுகவினர் உடன் செல்லும்போது ஒரு வீட்டில் ஜெயலலிதா படமோ அல்லது எடப்பாடி பழனிசாமி படமோ இருந்தால் அங்கும் ஓட்டு இருக்குமா? பாஜக செல்லும்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வீட்டில் அவர்களுக்கு ஓட்டு இருக்குமா?'' என்று தெரிவித்தார்.
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பிய சீமான், ''அவ்வளவு நேர்மையாக இருந்தால் அந்த வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டியதுதானே. அப்போது நீங்கள் (பாஜக) கோமாவில் இருந்தீர்களா? இத்தனை வருடம் திமுகவுடன் கொஞ்சி குலாவியபோது ஏன் பேசவில்லை? கொளத்தூரில் மட்டும் தான் போலி வாக்காளர்கள் உள்ளனரா? பாஜக வென்ற தொகுதியில் இல்லையா?
SIR பணிகளுக்கு கால அவகாசம் வேண்டும்
SIR பணிகளுக்கு கால அவகாசம் வேண்டும். எனது வாக்கே பறிபோய் விடும் என்ற நிலை உள்ளது. தேர்தல் ஆணையம் பிப்ரவரியில் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட்டால் அதில் எங்களது வாக்குகள் இல்லையென்றால் பின்பு உள்ள குறுகிய காலத்தில் எங்கள் பெயர்களை எப்படி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க முடியும்?'' என்று கூறியுள்ளார்.