தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகி விலகல்!

By Manikanda PrabuFirst Published Feb 26, 2024, 6:04 PM IST
Highlights

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. இதனால், இரு கட்சிகளும் தங்களது தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், பாஜக உடன் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி படுத்தியுள்ளது. நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாகவும் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பாஜக மாநிலத் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

Latest Videos

அதேசமயம், பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதால் பலரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனவே, அக்கட்சியின் இருந்து பலரும் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஜி.கே.வாசனும் கூட செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பலரும் அதிமுகவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி என்பது தனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை எனக்கூறி அக்கட்சியில் இருந்து அசோகன் விலகியுள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசனுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது: “நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தந்தை ஒரு சுத்ந்திர போராட்ட தியாகி, 1980இல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி வாய்பை இழந்தவர். அவரைத் தொடர்ந்து நானும் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன். 1996இல் மறைந்த மக்கள் தலைவர் ஐயா எடுத்த அரசியல் ரீதியான முடிவை அன்று ஏற்றுக் கொண்டு அவருடன் தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன்.

அதிமுக சார்பில் போட்டியிட தனபால் மகன் விருப்பமனு: நீலகிரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி?

அதே போல அவருடைய மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று தங்களின் மேலான தலைமையின் கீழ் தலைமை நிலை செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று (26.02.2024) முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி செயலாளர் யுவராஜ், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அவர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!