மறைக்கப்பட்ட மர்மங்கள்... கேள்வி எழுப்பும் "சுவாதி கொலை வழக்கு'!

First Published May 30, 2017, 4:51 PM IST
Highlights
Swathi Kolai Vazhakku asks some serious questions about Swathi murder case


தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வழக்கில் ஒன்று சுவாதி கொலை வழக்கு. சுவாதி கொலை சம்பவம், ராம் குமார் கைது, மற்றும் அவரது மர்ம மரணம் என அதிர்ச்சிகளும் திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்த இந்த வழக்கு தற்போது ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளிவரவுள்ளது.

உளவுத்துறை, ஜனனம், வஜ்ரம் போன்ற திரைப்படங்களை இயக்கிய SD.ரமேஷ் செல்வன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரைலர் நேற்று வெளியானது. வழக்கமாக உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்கள் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை அப்படியே உபயோகிக்காமல் அதை நினைவுபடுத்தும் விதமான பெயர்களை உபயோகிப்பர். 

ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை நபர்களின் பெயர்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வாதி, ராம்குமார், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், மீனாட்சி புரம் ஆகிய பெயர்களும் காவல் துறையினர் ராம் குமாரின் கழுத்தை அறுக்கும் சம்பவமும் டிரெய்லரை பார்க்கும் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தப் படத்தில், சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக, அஜ்மல் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதியாக, ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் ஏ.வெங்கடேஷ், ராம் குமார் தரப்பு வக்கீலாகவும் நடிக்கிறார்கள்.

இயக்குநர் ரமேஷ் செல்வன் கூறும்போது, ‘நிஜ சம்பவங்களை படமாக்கும் போது சுவாரஸ்யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால் சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். மக்களுக்குத் தெரிவிக்கப்படாத பல சம்பவங்கள் இதில் இடம் பெற்றுள்ளது’ என்றார்.

முழுவதும் மர்மங்கள் அவிழ்க்கப்படாத இந்த வழக்கில் என்ன முடிவு கூறப்பட்டுள்ளது என்பதை படம் வெளிவரும்வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

click me!