
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் முடக்கப்பட்ட சன் டி.வி. குழுமத்தின் 743 கோடி ரூபாய் சொத்துக்களை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்ட அறிவித்துள்ளது. மேலும் அமலாக்கத் துறை புதிய வழக்கு தொடரவும் அனுமதி வழங்கியுள்ளது.
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், 2ஜி உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அதன் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்ததாகவும், இதற்கு லஞ்சமாக மேக்சிஸ் நிறுவனம் சார்பில், சன்.டி.வி. குழுமத்திற்கு 743 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சன் டி.வி. குழுமத்தின் 743 கோடி ரூபாய் அமலாக்கப் பிரிவு முடக்கியிருந்தது.
இதனை விடுவிக்க தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சன் டி.வி.யின் சொத்துக்களை விடுவிக்க மறுத்துவிட்டது.
மேலும், மாறன் சகோதரர்களை விடுவித்து சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தடை விதிக்க, வழக்கு தொடரவும் அமலாக்கப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.