
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் 5 ராட்சத கிணறுகளை வெட்டி தண்ணீர் எடுத்ததால், பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் குறித்து நேற்று நள்ளிரவு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதில் லட்சுமிபுரத்தில் வெட்டப்பட்டுள்ள 5 ஆவது கிணற்றை பொது மக்களிடம் ஒப்படைப்பதாகவும், அங்குள்ள 40 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விற்றுவிட்டு வெளியேறி விடுவதாகவும் ஓபிஎஸ் உறுதி அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சியில் ஓபிஎஸ்க்கு சொந்தமான இடத்தில் 4 ராட்சத கிணறுகள் தோண்டியதால் லட்சுமிபுரம் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கும் நீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 4 ராட்சத கிணறுகள் தோண்டிய நிலையில் தற்போது மேலும் ஒரு கிணறு தோண்டப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த வாரம் தங்களது வீடுகள், கடைகள் போன்றவற்றை அடைத்துவிட்டு ஓபிஎஸ் கிணற்றை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த போலீசார் பொது மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த போராட்டத்துக்கு எந்த பதிலும் கிடைக்காததால் தொடர்ந்து நாள்தோறும் போராட்டங்க்ள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு, இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது, அதில் தேனி மாந்டட ஆட்சியர், எம்.பி.பாஸ்கரன், ஓபிஎஸ்சின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர், 4 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவு பெற்றது.
அப்போது லட்சுமிபுரத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விற்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி விடுவதாகவும், சர்ச்சைக்குரிய கிணற்றை பொது மக்களிடம் ஒப்படைப்பதாகவும் ஓபிஎஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.