
மருத்துவ படிப்புக்கான 85 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பல்வேறு கட்சியினரும், சமூக அமைப்பினரும் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதற்கு மாநில அரசு சார்பில், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இட உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையொட்டி கடந்த ஜூன் 22ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து, அரசாணை பிறப்பித்தார். மேலும் மாநில அரசின் கொள்கைசார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டார்.
இதைதொடர்ந்து, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த சென்னை மற்றும் தஞ்சையை சேர்ந்த மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், சிபிஎஸ்இபாட திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தற்காலிகமாக ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு அனைவருக்கு பொதுவானது. இட ஒதுக்கீடு விஷயத்தில், சிபிஎஸ்இ மாணவர்களும் உட்படுத்த வேண்டும். 85 சதவீதம் மாநில பாடத்தில் படித்த மாணவர்கள் சேர்க்கை நடந்தால், மீதமுள்ள 15 சதவீத்த்தில் சிபிஎஸ்இ மற்றும் வேறு பாடத் திட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை 319 பேர் சேர்க்கப்படுவார்கள்.
இதனால், சிபிஎஸ்இ உள்பட மற்ற பாடத் திட்டத்தில் படித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக அரசு, மருத்துவ படிப்புக்காக பிறப்பித்த 85 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்வதாக கூறி, உத்தரவிட்டது.