
திருவாரூர்
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை எனப்படும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சையில் இந்தியாதான் முன்னோடியாக விளங்குகிறது என்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் சொன்னார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உலக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தினக் கருத்தரங்கம் நேற்று நடைப்பெற்றது.
இதில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டு பேசியது:
“பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை எனப்படும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சையில் இந்தியாதான் முன்னோடியாக விளங்குகிறது.
இந்தியாவில் சுஸ்சுருதா தான் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையின் முன்னோடி. அவர் அறுவைச் சிகிச்சை செய்வதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு மூங்கிலை கொண்டு பல 'மாதிரிகள் செய்து வைத்து, தையல் போடும் கலையினையும், காயங்களின் தன்மையை ஆராயும் முறைகளையும் பயிற்றுவித்தார்.
இதுமட்டுமல்லாமல் சுஸ்சுருதா சம்ஹிதா எனும் பெயரில் அவர் எழுதிய நூலில் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் பற்றியும், அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளார்.
நெற்றியிலிருந்து தசையை எடுத்து சிதைந்த மூக்கை சரிசெய்யும் முறையை அன்றே விளக்கியுள்ளார். இன்றைய நவீன உலகிலும் இந்த அறுவைச் சிகிச்சை முறை 'சுஸ்சுருதா வகை' என்றே அழைக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மட்டுமன்றி ஆயுர்வேதம், பல் சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சையிலும் சுஸ்சுருதா முன்னோடியாக விளங்கினர். இது இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டியது” என்ரு பேசினார்.
இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திருச்சியைச் சேர்ந்த முதுநிலை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் செந்தில்வேல்குமார் பங்கேற்று இளம் மருத்துவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை குறித்து விளக்கமளித்தார்.
அறுவைச் சிகிச்சைத்துறை தலைவர் சீனிவாசன், மருத்துவர் ராதாகிருஷ்ணன், துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.