
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல்அட்டைகளை பதுக்கி வைத்த 2 வாலிபர்களை, அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்களில் கடல் அட்டையும் ஒன்றாக உள்ளது. இதனால் மத்திய அரசு, கடல் அட்டையை பிடிப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக வன உயிரின காப்பக அதிகாரிகள், கடல் அட்டையை பதுக்குபவர்கள், கடத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் கடல் அட்டையில்பல்வேறு மருந்து, ரசாயனம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், வெளிநாடுகளுக்கு கடல் அட்டைகளை கடத்தி, லட்சக்கணக்கில்பலர் பணம் சம்பாதிக்கின்றனர். அழிந்து வரும் உயிரினத்தை காப்பதற்காக, கடல் அட்டையை பிடிக்கவும், பதுக்கவும், கடத்தவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி கடலோர குழும அதிகாரிகள் மற்றும் மன்னார் வளைகுடா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்று அதிகாலையில் மடத்தூர் பகுதிக்கு சென்று அதிகாரிகள் மாறு வேடத்தில் தீவிரமாக ரகசியமாக்கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே அதிகாரிகள், அந்த குடோனை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். ஆனால், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.
இதைதொடர்ந்து அதிகாரிகள், குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகள், ஒரு கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. மேலும், பிடிபட்ட வாலிபர்களை, தங்களது அலுவலகம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அதில், தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்த முருகன் (35), நெல்லையை சேர்ந்த ரவி (23) என தெரிந்தது. வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்த அதிகாரிகள்,அவர்கள் எங்கிருந்து கடல் அட்டைகளை கொண்டு வந்து பதுக்கினார்கள்.. ? அவர்களுடன் தொடர்புடைய கடல் அட்டைகள் கடத்தும் கும்பல் யார்...? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.