அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை கடந்த 2008ஆம் ஆண்டில் முறைகேடாக ஒதுக்கியதாக 2012 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023 ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சரியான காரணங்களை ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் பதவி நீக்கம் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
இந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.