
Supreme Court Bans Arrest Of Poovai Jaganmoorthy: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிலர் அந்த இளைஞரின் சகோதரரான சிறுவனை கடத்தியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு
சிறுவனை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஓய்வுபெற்ற ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தான் சிறுவன் கடத்தல் தொடர்பாக பூவை ஜெகன் மூர்த்தியிடம் பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது புரட்சி பாரதம் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
போலீசார் விசாரணை முடிந்து சென்ற நிலையில், இந்த வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். பூவை ஜெகன் மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. ஆகவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தலைமறைவான பூவை ஜெகன் மூர்த்தி
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முன்முயற்சி உள்ளதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி நேரில் ஆஜரானார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஜாமீன் மறுக்கப்பட்டதால் இதனால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை எழுந்த நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவானார்.
முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்
அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக இருந்து வந்த நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று பூவை ஜெகன் மூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்திக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பூவை ஜெகன் மூர்த்திக்கு ஜாமீன் வழங்கியதோடு அவரை கைது செய்யவும் தடை விதித்தது. அவர் பிணைத்தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.