
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே பல்வேறு விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளது. அதிமுக தலைமையின் கீழ் கூட்டணி ஆட்சி என பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், அதிமுகவினரோ தேர்தல் கூட்டணி மட்டும் தான். கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்நிலையில் எந்த காலத்திலும் அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கூட்டணி ஆட்சிக்கு மக்கள் தயாராகி விட்டார்கள். ஆனால், எந்த காலத்திலும் பாஜக ஆள்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அதை மறந்து விடாதீர்கள்.
* பாஜகவால் தான் ஒரு பெரிய கூட்டணியை கட்டமைக்க முடியும். திமுகவுக்கு எதிராக இருப்பவர்கள் எல்லோரும் அதிமுக கூட்டணியில் தான் இணைவார்கள். 2024ல் அப்படி இணைந்த கூட்டணியை கலைத்ததே பாஜக தான். இப்பொழுதும் தனக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதற்காக கூட்டணியை கட்டமைக்கின்ற பொறுப்பை பாஜக ஏற்றுக்கொண்டு அதிமுகவை தனிமைப்படுத்துகிறது.
* NDA கூட்டணி ஆட்சி, அதற்கு தமிழகத்தில் அதிமுக தான் தலைமை, முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். NDA கூட்டணி என்றாலே அது பாஜக தலைமையிலான அகில இந்திய கூட்டணி என்றுதான் பொருள்படுகிறது. தமிழகத்தில் அது அதிமுக தலைமையில் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருந்தாலும், மத்திய பாஜகவின் சொல்லுக்கும், செயலுக்கும் பொறுப்பேற்று திராவிட கட்சி என்று அடையாளத்தையும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா போன்ற தலைவர்களின் மாண்பையும் சிதைப்பதாக அமையும். அது எளிதில் திமுகவுக்கு சாதகமான வாய்ப்புகளை வழங்கிவிடும்.
* நிறைய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு கூட்டணி அமைச்சரவை, அதிக தொகுதி பங்கீடு என வாக்குறுதி கொடுத்து பாஜக கூட்டணியை கட்டமைக்கிறது. அதிமுகவுக்கு பாதிப்பையும், பலவீனத்தையும் ஏற்படுத்தி அதை மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்து கூட்டணியை உருவாக்க நினைப்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
* இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் பாஜக கூட்டணி சேர்ந்து, கூட்டணி அமைச்சரவை அமைத்து தற்போது தனிப்பட்ட முறையில் அவர்கள் ஆட்சி அமைக்க முயற்சித்து அதில் வென்றும் இருக்கிறார்கள். தமிழகத்திலும் அதை நடைமுறைப்படுத்தத்தான் தந்திரத்தோடு பாஜக களம் இறங்கி இருக்கிறது. இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமியே ஒப்புக்கொண்டாலும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
* கூட்டணி ஆட்சி என்பது தனிப்பட்ட முறையில் வென்று ஆட்சி அமைக்க வலுவில்லாத பாஜக எடுக்கிற முயற்சி. அதற்கு உறுதுணையாக சிறு சிறு கட்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால், அதிமுக 2016ல் தனித்து நின்று வென்று ஆட்சி அமைத்த கட்சி என்பதை மறந்து விடுகிறார்கள். அந்த வலிமையை தற்போது அதிமுக மீட்டெடுக்க வேண்டும்.
* கூட்டணி ஆட்சி என்று வந்தால் ஆட்சி கவிழ்ப்புகளும் குதிரை பேரங்களும் அதிகம் நடைபெறும். மத்தியில் ஆளுகிறவர்கள் கட்டுப்பாட்டில் அரசாங்கம் செயல்படுகிற நிர்பந்தம் ஏற்படும். எனவே எந்த காலத்திலும் அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இதில் அதிமுக தொண்டர்கள் உறுதியாக இருப்பார்கள் என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.