
தேனி
தேனியில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு வந்ததால் பேருந்தை மின்கம்பத்தில் மோதி பயணிகள் உயிரை காப்பாற்றினார்.
திண்டுக்கல்லில் இருந்து குமுளி நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர். பேருந்தை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உலுப்பக்குடியைச் சேர்ந்த ராஜாராம் (35) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அந்த பேருந்து பெரியகுளம் - மதுரை சாலையில் தேனி மாவட்டம், எ.காமாட்சிபுரம் அருகே சென்றபோது, ஓட்டுநர் ராஜாராமுக்கு திடீரென வலிப்பு வந்தது. பேருந்தை தொடர்ந்து இயக்க முடியாமல் அவர் மிகவும் சிரமப்பட்டார்.
இதனையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். அதற்குள் அந்த பேருந்து சிறிது தூரம் சென்று அங்குள்ள மின்கம்பத்தில் வேகமாக மோதியது.
இதில் அந்த மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்தது. அப்போது தானாகவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் ராஜாராம் காயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், பயணிகள் மாற்று பேருந்தில் பயணத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து பெரியகுளம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.