
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஜெராக்ஸ் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் நல உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது:
“திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் புதிதாக நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய இலவச கணினி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இதேபோல, இலவச தையல் பயிற்சி வகுப்புகள், 10, 12-ம் வகுப்பு மற்றும் அரசு பொதுத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படுகின்றன.
மேலும், ஏழை, எளியோருக்கு இலவச பட்டா, சிட்டா எடுத்துத் தருதல், ரூ.1-க்கு புகைப்படம் எடுத்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துத் தருதல் ஆகியவை தொடங்கப்படுகிறது.
வருகிற சனிக்கிழமை (மார்ச் 18) அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இந்த சேவைகளைத் தொடக்கி வைக்கிறார்.
மேலும், பேச்சு, கட்டுரை, கவிதை, கருத்தரங்கம், பட்டிமன்றத்தில் வெற்றி பெற்ற 247 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 320 ஆசிரியஆசிரியைகளுக்கு பரிசுகள், விருதுகளை டி.டி.வி.தினகரன் வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (மார்ச் 18) மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகே நடைபெறும் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு டி.டி.வி.தினகரன் நல உதவிகள் வழங்குகிறார்” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில், எம்எல்ஏக்கள் வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), தூசி மோகன் (செய்யாறு), நகரச் செயலாளர் ஜெ.செல்வம், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் வி.பவுன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.