
வருமான வரியை செலுத்த அலையத் தேவையில்லை, விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரி அலுவலகம் திறக்கப்படும் என வருமான வரி முதுநிலை ஆணையர் அஜித்குமார் ஸ்ரீ வஸ்தவா தெரிவித்தார்.
திருவள்ளூரில் வருமான வரி அலுவலக கிளை அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சென்னை வருமான வரி அலுவலக ஆணையர் பிரமோத் நான்ஜியா தலைமை தாங்கினார். முதுநிலை ஆணையர் காலே ஹரில்லால் நாயக் முன்னிலை
வகித்தார்.
இந்த விழாவில் தமிழ்நாடு - புதுச்சேரி வருமான வரி முதுநிலை ஆணையர் அஜித்குமார் ஸ்ரீ வஸ்தவா பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசியது:
“தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இந்த அலுவலகம் 29-வது கிளையாகும், விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரி அலுவலகம் திறக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். அதில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் பொது வியாபாரிகள் உள்ளனர்.
வருமான வரி நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆகையால் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வியாபாரிகள் தாமாகவே முன் வந்து வருமான வரியை செலுத்த வேண்டும்” என்று பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட வருமான வரி இணை ஆணையர் சாந்தகுமார் ராஹா நன்றி தெரிவித்தார்.