
தாராபுரம்
கேரள அரசு, பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட 240 பெண்கள் உள்பட 460 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைவரும் காடு அனுமந்தராய சாமி கோவில் முன்பு கூடினார்கள்.
பிறகு அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியவாறு, ஊர்வலமாக சென்று பூங்காசாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் வரை வந்தனர்.
அப்போது அங்கு அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் செல்வா பழனிச்சாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் அதிமுக ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஞானசேகரன், தமிழக விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரகுபதி, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் முருகானந்தம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சித்திக், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ஒண்டிவீரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் ரவி கூறியது:
“அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு அமராவதி அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உப்பாறு அணைக்கு ஆண்டுதோறும் பி.ஏ.பி.யின் உபரி நீரை வழங்க வேண்டும்.
பி.ஏ.பி. பிரதான கால்வாயோடு, உப்பாறு அணைக்கால்வாயை இணைக்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தை நடத்தினோம்.
இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் தாராபுரம் – கரூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 240 பெண்கள் உள்பட 460 பேரை காவலாளர்கள் கைது செய்து அனைவரையும் பூங்கா சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.