
தமிழக மாணவர் முத்து கிருஷ்ணன் மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என திருத்தணி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் படித்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக மாணவரின் தந்தை பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் புத்தர் மாணவர்கள் சங்கத்தினர் முத்து கிருஷ்ணனுக்கு கல்லூரி வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆய்வு மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து மத்திய அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இறந்தவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
மாணவர்கள் சரவணன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மரணங்கள் குறித்த வழக்குகளை மத்திய அரசு சி.பி.ஐ.யிடம் உடனடியாக ஒப்படைத்து உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும்.
உயர் கல்விக்காகவும், மருத்துவக் கல்விக்காகவும் டெல்லி செல்லும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து மரணம் அடைவதைத் தடுக்க மத்திய அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கல்லூரி மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவலாளர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் செல்லச் செய்தனர்.