
கோயம்புத்தூர்
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து இரண்டாவது நாளாக போராடிய அரசு கல்லூரி மாணவர்களை காவலாளர்கள் குண்டுகட்டாக வேனில் ஏற்றி கைது செய்தனர். திரும்ப பெறும்வரை போராடுவோம் என்று மாணவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர்.
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கம் மற்றும் முற்போக்கு மாணவர் அமைப்புகள் சார்பில் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று 2-வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லூரி முன்பாக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவலாளார்கள் மாணவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால், பேருந்து கட்டணத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி காவலாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர், வேனில் ஏற்றியதால் மாணவர்கள் மற்றும் காவலாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய 50 மாணவர்களை காவலாளர்கள் அடாவடியாக கைது செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் நின்றிருந்த மாணவர்களை காவலாளார்கள் விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.