
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனு விநாயகர் நகரை சேர்ந்தவர் பாலு. டெய்லர். இவரது மனைவி ஷீலா. இவர்களது மகன் ஹேமச்சந்திரன் (21). தாம்பரம் அருகே வேங்கைவாசலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை ஷீலா, கடைக்கு செல்வதாக கூறி சென்றார். ஹேமச்சந்திரன் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணிக்கு அவர் வீடு திரும்பியபோது, முன்கதவு தழ்ப்பாள் போடாமல் மூடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது, ஹேமச்சந்திரன் அறையில் இருந்தார்.
கதவை நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஹேமச்சந்திரன், தூக்கில் தொங்கியபடி துடித்து கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
புகாரின்படி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், ஹேமச்சந்திரன் எழுதி வைத்த பரபரப்பு கடிதம், பெற்றோரிடம் சிக்கியது. இதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதில், என்னுடைய மரணத்துக்கு எனது கல்லூரியின் துறை தலைவர்தான் காரணம். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், முடியவில்லை. எனது வருகை பதிவை குறைத்து, என்னை பட்டம் பெறாமல் செய்வேன் என கல்லூரி துறை தலைவர் என்னை மிரட்டினார்.
அதேபோல் எனது வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களையும் அவர் மிரட்டினார். ஆனால், என்னை மட்டும் பழி வாங்கிவிட்டார். என்னை தேர்வு எழுத விடமாட்டேன் என கூறினார். அதேபோல் பழி வாங்கிவிட்டார்.
எனக்கு கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், இந்த கல்லூரியில் என்னால் படிக்க முடியவில்லை. துறை தலைவர் ஏற்கனவே கூறியதுபோன்றே, தன்னை படிக்கவிடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து, தேர்வு எழுத விடாமல் தடுத்து விட்டார்.
மேலும் கல்லூரிக்கு சரியாக வராத மாணவர்கள் என்னுடைய வகுப்பிலும் நிறைய பேர் இருக்கும் போது என்னை மட்டும் வருகை நாட்கள் குறைவு என கணக்கு காட்டி துறை தலைவர் பழிவாங்கி விட்டார். துறை தலைவரின் தொடர் தொல்லையால் தான் இந்த சோக முடிவை தேடிக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை தலைவர் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாணவன் ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், நேற்றும் இன்றும் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.