
காவலர் சங்கம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை காவலர்களின் குடும்பத்தினர் முற்றுகையிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், சட்டப்பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் தொடங்க உள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பிறகு சபாநாயகர் தனபால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவை நிகழ்வை கலந்து கொண்டுள்ளார். இன்று முதல் 3 நாட்களுக்கு காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், காவலர்களுக்கு 8 மணி நேர வேலை, அரசு பணியாளர்களுக்கு நிகராக ஊதியம் வழங்குதல், காலி பணியிடங்கள் நிரப்புதல், உயர் அதிகாரிகளுக்கு செய்யும் ஆர்டர்லி (சேவகம்) முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று அண்மைக்காலமாக வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனும் பட்சத்தில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் காவலர்களின் குடும்பத்தினர் ஈடுபடுவார்கள் என்று சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், காவல் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் 3 நாட்களுக்கும் காவலர்கள் யாருக்கும் விடுமுறை அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை மீறி விடுமுறை எடுப்பவர்களைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்ற அரசு ஊழியர்களுக்கு உள்ளதுபோல் தங்களுக்கும் சங்கம் வேண்டும் என்று காவலர்கள் கூறுகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்போது சீர்படுத்த வேண்டிய காவல் துறையினரே சங்கம் அமைத்தால், அது சீரழிவை ஏற்படுத்தும் என்று ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேபோல், மற்ற துறை சார்ந்த அலுவலர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபடுவர்.
ஆனால், காவலர்களே தங்களது கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினால் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் யார் ஈடுபடுவார்கள் என்ற கேள்கி எழுந்துள்ளது.
இந்த நிலையில், தலைமை செயலகத்தை சுற்றி உள்ள பகுதியில் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் போன்ற பகுதிகளிலும் காவலர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.