
செங்கல்பட்டு அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபரின் உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அனுமந்தபுத்தேரி, பழையை ஜிஎஸ்டி சாலையை சேர்ந்தவர் ஞானசீனிவாசன் (42). பாஜக நகர துணை தலைவர். இவரது வீட்டின் முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வியாபாரம் முடிந்ததும், ஞானசீனிவாசன் கடையை மூடி கொண்டு வீட்டுக்கு சென்றார். சுமார் 10 மணியளவில், பைக்கில் அங்கு வந்த மர்மநபர்கள், திடீரென ஞானசீனிவாசன் வீடு மற்றும் கடையின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததும், அப்பகுதி மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வீடு மற்றும் கடையின் முன் பகுதியில் விழுந்ததால், ஞானசீனிவசான் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சிதறல்களை கைப்பற்றினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசியல் முன் விரோதத்தில் யாராவது அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினார்களா, பைனான்ஸ் தொழில் செய்வதில் போட்டி ஏற்பட்டு அவரை கொலை செய்ய முயன்றார்களா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில் ஞானசீனிவாசன் வீட்டின் எதிரே உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 2 பேர் பைக்கில் ஞானசீனிவாசன் கடையின் அருகே சென்றனர். அதில் பைக்கில் இருந்து இறங்கிய ஒருவர், வீட்டின் அருகே சென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு வெளியே ஓடிவரும் காட்சி பதிவாகி உள்ளது.
தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதில், பழைய குற்றவாளிகளின் உருவம் பொருந்துகிறதா என ஆய்வு செய்கின்றனர்.