
ஜி.எஸ்,டியை ரத்து செய்ய வலியுறுத்தி நெசவாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் ஒரு நாளைக்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் செயல்படும் சுமார் 2 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட விசைத் தறிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு வேட்டி, சேலைகள் மற்றும் தமிழக அரசின் இலவச வேட்டி – சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் கடந்த 1–ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தபட்டு உள்ளது. இதில் நெசவு தொழிலுக்கு 5 முதல் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிசைத் தொழில் மூலம் நெசவு செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுவதுமுள்ள நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்த்து கடந்த மாத இறுதியில் மூன்று நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நெசவாளர்கள் சார்பில் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் மற்றும் ஆண்டிப்பட்டி தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும்.
இந்தப் போராட்டம் குறித்து அந்தப் பகுதியில் நேற்று இரவு தண்டோரா மூலமாகவும், சுவரொட்டி மூலமாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது என்பது கொசுறு தகவல்.