கேரள அரசு மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழக நிலங்களை மீட்க போராடிய 64 பேர் கைது…

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
கேரள அரசு மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழக நிலங்களை மீட்க போராடிய 64 பேர் கைது…

சுருக்கம்

64 people arrested for the restoration of Tamil Nadu land from Kerala state

தேனி

தமிழக எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கேரள அரசு மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழக நிலங்களை மீட்க வலியுறுத்தி தேனியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கம்பம், கம்பம்மெட்டு சாலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கம்பம்மெட்டு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.ஆர். சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.

“தமிழக எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கேரள அரசு மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழக நிலங்களை மீட்க வேண்டும்.

ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்பட்ட நில அளவைக் கற்களை மீண்டும் ஊன்ற வேண்டும்.

இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழக - கேரள எல்லையை நிர்ணயத்தை உறுதி செய்ய வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், கேரளப் பகுதிக்குச் சென்று வரும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட எஸ்.ஆர். சக்கரவர்த்தி உள்ளிட்ட 32 பேரை, கம்பம் வடக்கு காவல் நிலைய காவலாளர்கள் கைது செய்தனர்.

அதேபோன்று கூடலூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையில், கம்பம்மெட்டு பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழக எல்லையை மீட்கவும், கேரள அரசு மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி, கூடலூர் - லோயர்கேம்ப் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட செங்குட்டுவன் உள்ளிட்ட 16 பேரை, கூடலூர் காவல் நிலைய காவலாளர்கள் கைது செய்தனர்.

அதேபோன்று காவல்துறை தடையை மீறி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் கம்பத்திலிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் செல்லும் ஜீப்களில் கம்பம்மெட்டுக்குச் சென்றனர்.

அங்கு, தமிழக எல்லையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நில அளவைக் கல் ஊன்றியிருந்த பகுதியில் கட்சிக் கொடியை ஊன்றி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் கேரள காவலாளர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு  மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து கம்பம்மெட்டுக்குச் சென்ற உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையிலான காவலாளர்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி சதீஷ்குமார் உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!
அன்புமணியை வளைத்துப்போட்ட இபிஎஸ்..! அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள்..?