
கூடுதல் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மணல் விற்பனையை அரசே நேரடியாக விற்பனை செய்வதால் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த அளவு குவாரிகள் மூலம் தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மணல் லோடுகள் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இதனால், தேவையை பூர்த்தி செய்ய முடியாம மணல் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
2 யூனிட் மணல் ரூ.1080க்கு அரசு வழங்கியது. ஆனாலும், பொது மக்களுக்கு ரூ.27,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 3 யூனிட் மணல் ரூ.1,600க்கு அரசு வழங்கினாலும், மணல் விற்பனையாளர்கள் ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார்கள். மணல் தேவையான அளவு கிடைக்காததால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மணல் விற்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. மணல் தேவைப்படுவோர் ஆன்லைனில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று வரை 30 ஆயிரம் லோடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், 400 பதிவு பொது மக்களும், 29 ஆயிரத்து 600 பதிவு மணல் லாரி உரிமையாளர்களும் செய்துள்ளனர். மணல் வினியோகம் சீரடையாமல் உள்ளதால் கட்டுமான தொழில்களும், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இதற்கிடையில் மணல் லாரி உரிமையாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், செங்கல், ஜல்லி விற்பனையாளர்கள், பில்டர்ஸ் ஆகியோர் ஒருங்கிணைந்து நாளை (6ம் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 85 மணல் குவாரிகளை திறக்க வேண்டும். அப்போது தான் தினமும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மணல் லோடுகள் அனுப்ப முடியும். மணல் தாராளமாக கிடைக்கும்போது, பொது மக்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும்.
மணல் வினியோகத்தை அதிகப்படுத்தினால்தான் விலை குறையும். இத்தொழிலை நம்பி 25 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனால் அரசு உடனே கூடுதலாக மணல் குவாரிகளை திறந்து அதிகளவு மணல் லோடுகளை வழங்க வலியுறுத்துகிறோம். இதற்காக வேலை நிறுத்தமும், உண்ணாவிரத போராட்டமும் நடத்த இருக்கிறோம் என்றனர்.