"108 எங்கள் திட்டம்" - விஜயபாஸ்கருக்கு அன்புமணி பதிலடி!

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 01:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
"108 எங்கள் திட்டம்" - விஜயபாஸ்கருக்கு அன்புமணி பதிலடி!

சுருக்கம்

108 Our Plan by anubumani ramadoss

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது குறித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக அதிமுகவினரிடையே விவாதம் நடைபெற்றது. இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசியல் லாபத்துக்காக அடுத்தவர் பெருமையைக் கொள்ளையடிக்கும் அரசியலை இனியாவது கைவிட்டு, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தும் நாகரீக அரசியலுக்கு இரண்டு திராவிட கட்சிகளும் மாற வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

108 அவசர ஊர்தித் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்  மத்திய சுகாதார அமைச்சராக 2004-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நான், 2005-ஆம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் தொடங்கினேன். உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கம் என்று போற்றப்பட்ட இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தான் 108 அவசர ஊர்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

108 அவசர ஊர்தி என்பது நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஊர்தியாக மட்டும் இருக்கக் கூடாது.

மாறாக, அனைத்து வசதிகளையும் கொண்ட நடமாடும் மருத்துவமனையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர ஊர்திகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. 

அதிநவீன வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி சேவையை நான் உருவாக்கி செயல்படுத்திய நிலையில், அத்திட்டம் தங்களால் கொண்டு வரப்பட்டது என அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் அடித்துக் கொள்வது முழுப்பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைப்பதற்கு சமமானதாகும். 

கரையான் புற்றில் குடியேறும் கருநாகங்களைப் போன்றவர்கள் தான் தாங்கள் என்பதை இரு திராவிடக் கட்சிகளும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றனர். இதற்கு முன் திமுக தலைவர் கலைஞர் ஒருமுறை 108 அவசர ஊர்திச் சேவைத் திட்டம் தமது திட்டம் என்றார்.

அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டபோது பதில் கூறமுடியாமல் பின்வாங்கிவிட்டார்.

இப்போது அவரது தொண்டர்கள் இந்தத் திட்டத்திற்கு உரிமை கொண்டாட புறப்பட்டிருக்கின்றனர்.

108 அவசர சேவை ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது என கூசாமல் பொய் கூறும் குட்கா ஊழல் புகழ் விஜயபாஸ்கரால் இதை ஆதாரத்துடன் மறுக்க முடியுமா?

அரசியல் லாபத்திற்காக பொய் கூறுவது திராவிடக் கட்சிகளின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு.  

அடுத்தவர் பெருமையை கொள்ளையடிக்கும் அரசியலை இனியாவது கைவிட்டு, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தும் நாகரிக அரசியலுக்கு இரு திராவிடக் கட்சிகளும் மாற வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக..! திமுகவை வீழ்த்த.. கூட்டாக சூளுரைத்த அன்புமணி, இபிஎஸ்
வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!