
தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே நெடுங்காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி விவகாரத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாகட்டும், பாஜக அரசாகட்டும் கர்நாடக மாநிலத்திற்கே இதுவரை சாதகமாக இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி திறந்து விடாததால் தமிழக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகியதால் கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஏற்கனவே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாமான தண்ணீர் கிடைக்காத நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத் தில் புதிதாக அணை ஒன்றை கட்ட கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது.
அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீர் வெகுவாக குறைந்து விடும் என்பதால், மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில்,புதிய அணை கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.
மழை காலத்தில் கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்த இந்த அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கர்நாடக அரசு சொல்லி வருகிறது,
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் :
தமிழக அரசின் அனுமதி பெறாமல் மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது. கர்நாடக அரசின் நடவடிக்கை காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவுக்கு எதிராக உள்ளது. கர்நாடக அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர்கள் கூறிவந்த நிலையில், மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது என முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.