
50 எம்.பி.க்கள் வச்சிருக்கீங்களே.. மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாதா ? அதிமுகவை வறுத்தெடுத்த ஸ்டாலின் !!!
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்துக் கட்சியினரும் இணைந்து பிரதமரை சந்திக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும், மின் உற்பத்தி மற்றும் நீரேற்று நிலையத் திட்டங்களை நிறைவேற்றவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெவித்துள்ளார்.
அதிமுகவிற்கு 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருந்தும், அக்கட்சிக்குள் உள்ள அனைத்து அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜவை விழுந்து விழுந்து ஆதரிக்கின்ற நிலையிலும் கூட, மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு மத்திய அரசின் மூலம் தடை போட முடியவில்லை . மாநில அரசின் சார்பில், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியின் குறுக்கே எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்பதை மீறி , கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட தன்னிச்சையாக முயற்சிப்பது, மனிதாபிமானமற்ற செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை இருள் மயமாக்கும் இந்தப் பிரச்னையில், அதிமுக அரசு வழக்கம் போல் கடிதம் எழுதிவிட்டு, குறட்டை விட்டு தூங்கி விடாமல், உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதார த்தைப் பறித்து, அவர்களை நசுக்கும் கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்