இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.80 கோடி வரை தொழிற்கடன் வழங்க இலக்கு – ஆட்சியர் அறிவிப்பு…

First Published Jul 5, 2017, 8:23 AM IST
Highlights
loan rate increased to 80 crores to start self employment


சேலம்

சேலத்தில் நடப்பாண்டில் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.80 கோடி வரை தொழிற்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆட்சியர் சம்பத் அறிவித்தார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சிறப்புத் தொழில் கடன் வழங்கும் விழா சேலத்தில் நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சம்பத் தலைமைத் தாங்கினார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத் துணைப் பொது மேலாளர் இளங்கோ, திட்ட அலுவலர் காமராஜ், கிளை மேலாளர் தமிழரசன், மண்டல மேலாளர் ராமசாமி மற்றும் தொழில் அதிபர்கள் பலர் பங்கேற்றனர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் சம்பத் பேசியது:

“சேலம் மாவட்டத்தில் சிறப்புத் தொழில் கடன் வழங்கும் விழா வருகிற 7-ஆம் தேதி வரை நடக்கிறது. குறிப்பாக “டிக்” நிறுவனம் புதியத் தொழில் தொடங்க மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளை புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் கூடிய நீண்ட கால கடனுதவியை வழங்கி வருகிறது.

தொழிற்சாலை, நிலம், கட்டிடம், எந்திரங்கள் வாங்க மற்றும் நடைமுறை மூலதனத்திற்கான காலக்கடன் வழங்கப்படுகிறது.

மருத்துவமனை அமைக்க, திருமண மண்டபம், சமூக நலக்கூடம், காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களை அமைக்க, நீண்ட கால கடனுதவி வழங்குகிறது.

தமிழக அரசின் சிறப்புத் திட்டம் புதியத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் படித்த பட்டதாரி, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ படித்த இளைஞர்களுக்கான முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுயதொழில் தொடங்க குறைந்தபட்ச தொழில் முனைவோர் மூலதனம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே.

மேலும், 25 சதவீத மாநில அரசின் மூலதன மானியத்துடன் ரூ.1 கோடி வரையிலான திட்டங்களுக்கு கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மூலம் ரூ.45 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.80 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் கடன் திட்டங்கள் மற்றும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியங்கள் பற்றிய விவரங்களை அறிந்து தொழில் முனைவோர் பயன்பெற வேண்டும். இந்தத் தொழில் கடன் விழாவின்போது பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும்” என்று அவர் பேசினார்.

tags
click me!