
சேலம்
“பிரதமர் மோடி ஏதாவது ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விடுவார். அதனால் கஷ்டப்படுவது என்னமோ மக்கள்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடினார்.
சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
‘தமிழ் தேசிய இனங்கள் சந்திக்கும் சிக்கல்களும், தீர்வுகளும்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தங்கதுரை தலைமை வகித்தார். இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் பேசியது:
“நமது மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவு என்பது தமிழ் தாயின் நிலமாகும்.
இலங்கை அரசால் இதுவரை 840 தமிழக மீனவர்கள் இறந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் “நெய்தல் படை” என்ற சிறப்பு படை உருவாக்கப்படும். இந்த படைக்கு மீனவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பிரதமர் மோடி ஏதாவது ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விடுவார். அந்தச் சட்டத்தால் கஷ்டப்படுவது என்னமோ மக்கள்தான்.
மக்களின் உழைப்பு வரி மூலம் சுரண்டப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வரியால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் சந்தை பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி பொருளாதாரம் மேற்கொள்ளும் வரை நாடு முன்னேறாது! என்று அவர் பேசினார்.