
வாக்குப்பதிவு விறு விறு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது கடமையை ஆற்றியுள்ளனர். தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் செலுத்தினார்.
இதற்காக தனது வீட்டில் இருந்து நடந்தே வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கே வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை முதலமைச்சர் ஸ்டாலின் செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். எனவே அனைவரும் அவர்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி உறுதி என தெரிவித்த அவர், நீங்கள் நினைப்பதை போல இந்தியா கூட்டணிக்கு வெற்றி தான் என நம்பிக்கையுன் கூறினார்.