
தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அதிமுக சார்பில் சைதை துரைசாமி களம் கண்டார்.
மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2 ஆயிரத்து 734 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்று அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அப்போது மு.க.ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் பதவியில் இருந்ததாகவும், இதனால் பணபலம், ஆள்பலம், அதிகார பலம், ஆகியவற்றை பயன்படுத்தி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.
பல வருடங்களாக நடைபெற்ற இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூரில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றி செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.