
இரட்டை இலை சின்னத்துக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட டிடிவி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, அவர்களுக்கு இடை தரகர்களாக செயல்பட்ட சுகேஷ், நத்துசிங், பாபு ஆகியோரை டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சிறையில் இருக்கும் டிடிவி.தினகரன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 26 மற்றும் 29ம் தேதி நடந்தது. மனு மீதான இறுதி விசாரணை நேற்று நடப்பதாக கூறி நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு ஜாமீன் மனுவின் இறுதி கட்ட விசாரணை வந்தது. நீதிபதி பூனம் சவுத்ரி தனது உத்தரவில், நீதிமன்றத்தில் பணிபுரியக்கூடிய நீதிபதியின் உதவியாளர் வராததால் தினகரனின் ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைப்படுகிறது என அறிவித்தார்.
அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தினகரனுக்கும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் 5 லட்சம் ரூபாய் செலுத்தி சொந்த ஜாமினில் செல்லலாம் என டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் இருவரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.