
சென்னை மெரினா கடற்கரையில் பஜ்ஜி கடை வைத்திருக்கும் அஜித்குமார் என்பவரின் திருமணத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்து கூறியதால் மணமகள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.
மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சென்னை மெரீனா கடற்கரையில் சென்று காற்று வாங்குவார். அப்போது அங்கு வரும் பொதுமக்கள், அங்கு கடை வைத்திருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து பேசுவார். அவர்களது கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வார்.
சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் பஜ்ஜி கடை வைத்திருக்கும் அஜித்குமார் என்பவை சந்தித்த மு.க.ஸ்டாலின் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தனக்கு 25 ஆம் தேதி சாந்தோமில் திருமணம் என்றும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் அஜித்குமார் அழைப்புவிடுத்தார்.
ஸ்டாலினும் இதை ஏற்க கொண்டு திருமணத்துக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஸ்டாலின் வர மாட்டார் என அஜித்குமார் நினைத்திருந்த நிலையில் நேற்று மாலை சாந்தோம் பகுதிக்கு சென்ற ஸ்டாலின் அஜித்குமார் – ஏஞ்சலீனா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
ஸ்டாலின் திடீரென திருமணத்துக்கு வந்து வாழ்த்தியது மணமக்களையும், அவர்களது உறவினர்களையும் ஆனந்த அதிர்ச்சி அடையச் செய்தது.