
காஞ்சிபுரம்
உத்தரமேரூர் பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு, செய்யாற்றிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடுமையான வறட்சியினால் நீர்மட்டம் குறைந்து குடிநீர் விநியோகம் தடைப்பட்டது.
இதனால், தண்ணீர் தேடி பக்கத்து கிராமங்கள் என்று அலைந்து திரிந்து அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி வந்து பயன்படுத்தி வந்தனர்.
பலமுறை இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், குடிநீரின்றி தவித்த மக்கள் பல்பேறு போராட்டங்களை நடத்தி தங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, பேரூராட்சி சார்பில், ஓங்கூர் குளம் அருகேயும், நல்லூர் திரெளபதி அம்மன் கோயில் அருகேயும், அண்ணாநகர், குப்பையநல்லூர் மற்றும் சோமநாதபுரம் சுடுகாடு அருகே உள்ள பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கின்றனர். மேலும், இந்தப் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் விநியோகத்தை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.