நீட் தேர்வுக்கு விலக்கு தந்தால் தான் பாஜகவுடன் கூட்டணி.! இபிஎஸ் அறிவிக்க தயாரா.? ஸ்டாலின் கேள்வி

நீலகிரி அரசு விழாவில், புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, தென் மாநிலங்களின் தொகுதி பங்கீடு குறித்து உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Tamilnadu politics EPS vs Stalin : நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,  

இன்னும் சில மணி நேரத்தில், இராமேஸ்வரத்திற்கு பிரதமர் வர இருக்கிறார். நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால், இராமேஸ்வரம் விழாவில் என்னால் பங்கேற்க முடியாத நிலைமை.  இந்த சூழ்நிலையை நான் அவருக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். இந்தக் கூட்டத்தின் மூலமாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக, உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய பிரதமர் மோடி அவர்களை நான் கேட்க விரும்புவது, 

Latest Videos

.வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்

தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தைப் நீங்கள் போக்கவேண்டும்.  “தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுடைய தொகுதி விழுக்காடு குறையாது” என்கிற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்கவேண்டும். வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எப்படி நள்ளிரவு 2 மணிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள்.  மக்களவையில் நம்முடைய அருமை சகோதரர் ஆ.ராசா அரைமணி நேரத்துக்கு மேலாக நெருப்பு பறக்க பேசியது தலைப்புச் செய்தி ஆனது. 

மாநிலங்களவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் 20 நிமிடத்துக்கு மேல் பேசி உணர்ச்சிபூர்வமாக அங்கே முழங்கியிருக்கிறார். இது ஒருபுறம்! இன்னொரு பக்கம், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை - எவ்வளவு நேரம் பேசினார் தெரியுமா?  ஒரே ஒரு நிமிடம்தான்! கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆகின்ற பேட்ஸ்மன் கூட இதை விட அதிக நேரம் களத்தில் இருப்பார். அப்படி அவர் பேசிய ஒரு நிமிடத்திலேயும் அ.தி.மு.க. இதை எதிர்க்கிறதா? ஆதரிக்கிறதா? என்று சொல்லவில்லை. 

சட்டமன்ற கட்சி தலைவர் கூட்டம்

தமிழ்நாடு அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதாவை நிராகரித்திருக்கிறது ஒன்றிய பா.ஜக. அரசு.  அதையும் நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் நான் அறிவித்துவிட்டு. அடுத்தகட்ட சட்ட, அரசியல் நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வருகின்ற 9-ஆம் தேதி தமிழகத்தில் இருக்கக்கூடிய, சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்  பழனிசாமி அவர்கள் என்ன செய்கிறார்? நேற்று முன்தினம் நீட்-ஆல் மாணவ, மாணவியர்கள் பலியானதற்கு திமுக மீது குற்றம் சொல்லி, அறிக்கை விடுகிறார். அம்மையார் ஜெயலலிதா இருந்தவரை கூட நீட்டைத் தமிழ்நாட்டுக்குள்ளே அனுமதிக்கவில்லை. 

நீட் தேர்விற்கு விலக்கு

அவர் மறைவுக்கு பிறகுதான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கிகளாக இருந்து இதை அனுமதித்தார்கள். இதுதான் உண்மை. நான் இப்போது கேட்பது – அப்போது ஆதரித்தீர்கள் – அனுபவித்தீர்கள் – அதையெல்லாம் விட்டுவிடுவோம். இப்போது நான் கேட்பது - கூட்டணியில் இருந்தபோதும், கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தபோதும் நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் நீங்கள் பா.ஜ.க-விடம் நிபந்தனை விதிக்கவில்லை? ஆனால், நம்முடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மூலமாக “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தெளிவாக சொன்னார் - நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்று தேர்தலில் உறுதிமொழி அளித்தார். நாங்கள் சொல்ல வைத்தோம். 

நீட் விலக்கு கொடுத்தால் தான் கூட்டணி

இப்போது கேட்கிறார் பழனிசாமி, நீட் ரகசியத்தை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே!  இந்தியா கூட்டணி ஆட்சி மட்டும் ஒன்றியத்தில் அமைந்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, “பா.ஜ.க. கூட கூட்டணி இருக்கிறது - இல்லை” என்று  மாற்றி மாற்றி பேசுகின்ற உங்களுக்கு நான் இந்த மேடையில் இருந்து சவால் விடுறேன்.  

தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் மேல் உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பா.ஜ.க. கூட கூட்டணிக்கு போவதற்கு முன்னால், “நீட் விலக்கு தந்தால்தான் கூட்டணி!” என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா? உருப்படியாக ஒன்றும் செய்யாமல், வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருப்பதாலேதான், மக்களால் மீண்டும் மீண்டும் நீங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். 

click me!