மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், பாஜக கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மாநில உரிமைகளை காக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Marxist Communist Conference : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு உங்களுள் பாதியாக இந்த மாநாட்டுக்கு வந்திருக்கும் என் பெயர், ஸ்டாலின்! இந்தக் கொள்கை உறவோடு "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகத்தான் நாம் தேர்தல் கூட்டணி அமைக்கிறோம்.
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா.?
மாற்றத்தை நோக்கிய நம்முடைய பாதையும் பயணமும் மிக நீண்டது. உடனே நிகழ, மாற்றம் என்பது ‘Magic’ அல்ல; அது ஒரு ‘Process’! இந்தப் பயணத்தில், 2019-ஆம் ஆண்டு முதல் நாம் இணை பிரியாமல் இருக்கிறோம். ஏன் என்றால், நம்முடைய இலக்கு என்ன - நாம் யாரை எதிர்க்க வேண்டும் - எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்கிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என்று நப்பாசையோடு சில வெளிநபர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது! இங்கு இருக்கும் யாரும், அதற்கு இடம் தரவும் மாட்டோம்!
கூட்டாட்சி என்ற சொல்லே இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ‘அலர்ஜி’ ஆகிவிட்டது. மாநில உரிமைகளுக்காகப் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரத் தன்மையால் அதிகமாக பாதிப்படைகின்றவர்களில் முதன்மையாக இருப்பது, நானும் நம்முடைய ‘சகாவு’ பினராயி விஜயனும்தான்! அதனால், இந்தக் கருத்தரங்கில் நாங்கள் பேசுவதை நீங்கள் வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ளலாம்!
ஆளுநர்கள் மூலம் மாநில வளர்ச்சி தடை
அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை டம்மியாக மாற்றி, ஒற்றையாட்சித் தன்மை கொண்ட பாசிச ஆட்சியை இன்றைய பா.ஜ.க. ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது! ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே உணவு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே பண்பாடு என்ற ஒற்றைத் தன்மை, ஒரு கட்சியின் ஆட்சியாக முதலில் அமைந்து, ஒரே ஒரு தனிமனிதரின் கையில் அதிகாரத்தை குவிக்கத்தான் அது பயன்படும்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை பா.ஜ.க. மாநிலத் தலைவர்களாக மாற்றி, முழு நேர அரசியல்வாதியாக செயல்பட வைத்து, மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறீர்கள். பா.ஜ.க.வுக்கு எதிரான மாநில அரசுகளை மிரட்டுகிறீர்கள். ஆட்சிகள் கவிழ்க்கப்படுகின்றன; கட்சிகள் உடைக்கப்படுகின்றன; கட்சிகள் மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மாநிலங்களே இருக்க கூடாது என்று நினைக்கிறீர்கள்.
கூட்டாட்சி இந்தியாவில் மலரும்
மாநில சுயாட்சி - கூட்டாட்சி - சமூகநீதி - மதநல்லிணக்கம் ஆகியவற்றுக்கு எதிரான - சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்! அதை உருவாக்க, இந்தியா முழுவதும் இருக்கும் ஜனநாயகச் சக்திகளைத் திரட்டுவோம். இதற்காகத்தான் தி.மு.க. குரல் கொடுக்கிறது. பொதுவுடமைத் தோழர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த மண்ணும் மக்களும் உயர்வு பெறச் சமத்துவக் கொள்கைகளே வேண்டும் என உருவான இயக்கங்கள்தான், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கங்களும்!
மார்க்சியக் கருத்தியலைக் காத்து நிற்கும் -இல், அவர்களில் ஒருவனென இந்த ஸ்டாலின் பங்கேற்றேன்!
இந்த மாநாட்டைச் வெற்றி பெறச் செய்த… pic.twitter.com/PYVceqP336
தென் மாநிலங்களின் பிரதிநிதத்துவம் குறையும்
முன்னதாக பேசிய பிரகாஷ் காரத், "இந்திய சுதந்திரத்திற்குப் பின் எப்போதும் இல்லாத அளவில் கூட்டாட்சி தத்துவத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக கூறினார். மாநில அரசுகள் மீது ஆளுநர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகாவில் நடந்துள்ளன. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசின் செயல்பாடுகளில் தலையீடு செய்கிறார்கள் என விமர்சித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறாமல் செய்யப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரிய அளவுக்கு தென் மாநிலங்களின் பிரதிநிதத்துவம் குறையும் என கூறினார். தொகுதிகளை குறைக்கும் முயற்சியால் உரிமைகளை, தேவைகளை பெறுவதில் சிக்கல் எழும் நிலை உருவாகும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.