பிரதமர் வருகை: பாம்பன் மசூதியின் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்ததால் சர்ச்சை!

Pamban Mosque: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாம்பன் பள்ளிவாசல் மினாரா தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

PM Modi Visit! pamban mosque covered tarpaulin tvk

தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 6ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின்  வருகையை முன்னிட்டு பாம்பன் பள்ளிவாசலின் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை

Latest Videos

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில்: புதிய பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு நிகழ்வுக்கான பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் மினாராவில் உள்ள எழுத்துக்களை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். இது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயலாகவும் உள்ளது. 

பள்ளிவாசலின் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைப்பு

சட்டம் மற்றும் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும் சூழலில் இத்தகைய நிகழ்வு நடைபெற்றிருப்பது மாநில அரசின் மெத்தனப்போக்கையும், மத நல்லிணக்கத்தை பேணுவதில் உள்ள தோல்வியையும் வெளிப்படுத்துகிறது. வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்திலும் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் கவலையளிக்கின்றன.  

வட மாநிலங்களில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து புறக்கணிப்பு 

வட மாநிலங்களில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருவதற்கு சான்றுகளாக சமீபத்தில் ஹோலி பண்டிகையின் போது பள்ளிவாசல்கள் தார்பாய்களால் மூடப்பட்டன. இத்தகைய பின்னணியில், தமிழகத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, வட மாநிலங்களின் மதவெறுப்பு நடவடிக்கைகள் தென்னிந்தியாவையும் தொற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது

நாட்டின் ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும் ஏற்று பிரதமராக பதவியேற்ற ஒருவரின் வருகைக்காக மத அடையாளங்களை மறைப்பது, இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கையை கேலிக்கூத்தாக்குவதோடு, அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கும் மத சுதந்திரத்திற்கு எதிரான துரோகமாகவும் அமைகிறது. இது வெறும் தனிப்பட்ட சம்பவமல்ல; மாறாக, முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும். இத்தகைய செயல்கள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதோடு, சிறுபான்மை சமூகங்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் விதைக்கின்றன. இதற்கு தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. எனவே, பள்ளிவாசலின் மினாராவை மறைத்த தார்ப்பாயை அகற்றி, மத சுதந்திரத்தை மதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

vuukle one pixel image
click me!