
திருச்சி,
திருச்சியில் அந்தோணியார் தேவாலயத்தில் பொங்கல் மற்றும் சல்லிக்கட்டுப் போட்டி நடைப்பெற்றது. புனித இன்னாசியார் தேவாலயத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு 402 காளைகள் சீறிப் பாய்ந்தன.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் வருடந்தோறும் சனவரி மாதத்தின் கடைசி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அந்தோணியார் தேவாலயத்தின் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதை தொடர்ந்து அந்தோணியார் தேவாலயத்தின் பொங்கல் விழாவையும், சல்லிக்கட்டு போட்டியையும் சிறப்பாக நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
சல்லிக்கட்டு போட்டிக்காக அங்குள்ள புனித இன்னாசியார் தேவாலயத்திற்கு முன்னர் தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதே போல் வாடிவாசலில் இருந்து காளைகள் செல்லும் பகுதியில் இருபுறமும் இரண்டடுக்கு மரத்தை வைத்து கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டு அதில் வலையும் பொருத்தப்பட்டிருந்தது.
சல்லிக்கட்டு விதிக்கான பாதுகாப்பு முறைகள் முறையாக செய்யப்பட்ட பின்னர், போட்டியில் பங்கேற்க சல்லிக்கட்டுக் காளைகள் நேற்று முன்தினம் இரவு முதலே கொண்டு வரப்பட்டன.
இந்த சல்லிக்கட்டு காளைகள் மற்றும், காளைகளை அடக்குவதற்காக வந்த மாடுபிடி வீரர்களையும் நேற்று அதிகாலை முதல் கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்களுக்கு ஊதா நிற சீருடைகள் வழங்கப்பட்டன.
ஏற்கனவே செய்யப்பட்டிருந்த அறிவிப்பின்படி நேற்று காலை அரசு அனுமதியுடன் சல்லிக்கட்டு போட்டி தொடக்க விழா நடந்தது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், கால்நடை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
போட்டி தொடங்கியதற்கு அறிகுறியாக முதலில் கோவில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
பின்னர் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு இருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
ஒவ்வொரு காளையும் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்ட போது அந்த காளையின் உரிமையாளர் பெயர், ஊர் மற்றும் அதனை அடக்குபவர்களுக்கு வழங்கப்படும் பரிசு விவரங்கள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டன.
இதனால் காளைகளை அடக்க தயார் நிலையில் மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக மைதானத்தில் நின்று கொண்டிருந்தனர்.
சீறி வந்த காளைகளின் திமிலை பிடித்து சில வீரர்கள் அடக்கினார்கள். இப்படி அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசுகள், தங்க கடிகாரம் மற்றும் பீரோ, கட்டில், நாற்காலி, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்பட பல பொருட்கள் உடனடி பரிசுகளாக அங்கேயே வழங்கப்பட்டன.
சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. இப்படி ஓடிய காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அடக்க வந்த வீரர்களை சில காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் மொத்தம் 52 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முகாமிட்டு இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர்ளில் சிலர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருங்குளத்தில் நடந்த சல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 402 காளைகள் பங்குபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சல்லிக்கட்டு ஆர்வலர்கள், இரசிகர்கள் சல்லிக்கட்டை காண திரண்டனர்.
பலரும் சல்லிக்கட்டை பார்த்து ரசிக்கும் வகையில் காளை செல்லும் பாதையில் இருபுறத்தில் டிராக்டர் டிப்பர் மற்றும் காலரி அமைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுமக்கள் சல்லிக்கட்டு போட்டியை கண்டு ைரசித்தனர். இதனால் நேற்று கருங்குளம் கிராமமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.
காலை 9 மணிக்கு தொடங்கிய சல்லிக்கட்டு மாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது. உயிர்ப்பலி எதுவுமின்றி அமைதியான முறையில் சல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்து.