
தஞ்சாவூர்
தஞ்சையில், நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கெடு வைத்துள்ளார் தஞ்சை ஆட்சியர்.
தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் மட்டுமல்லாது, காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடிய மரம்.
உயர்நீதிமன்ற உத்தரவின் படி, தஞ்சை மாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இதே போல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களும் அகற்றப்பட்டன.
ஆனால், தனியாருக்கு சொந்தமான இடங்களில் இன்னும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் இருக்கின்றன என்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஆட்சியர் அதற்கு நடவடிக்கை எடுத்தார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை எடுத்த நடவடிக்கைக்கான அறிக்கை:
“சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) இடத்தின் உரிமையாளர்கள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும்.
அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அகற்றப்படாவிட்டால் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் உள்ளாட்சித்துறையால் உடனடியாக அகற்றப்படும்.
அவ்வாறு சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கு செலவிடப்படும் செலவுத் தொகையுடன் அபராத தொகையும் சேர்த்து தொடர்புடைய இடத்தின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்”. என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.