
தஞ்சாவூர்,
“தோழர்கள் என்ற சொல், சமூக விரோத சொல்” என்று பகிரங்கமாக அறிவித்த கோவை மாநகர காவல் ஆணையர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.
ஈழத்தமிழர்களின் இன்னுயிரை காக்க தன்னுயிரை இழந்த முத்துக்குமாரின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே முத்துக்குமாரின் உருவப்படத்திற்கு அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், புதுச்சேரி தமிழ்மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலையின் மாவட்ட பொறுப்பபளர் அருணாசலம், தமிழ்நாடு மாணவர் அமைப்பு பொதுச்செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை நசுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கலவரம் விளைவித்ததாக 253 பேரை காவலாளர்கள் கைது செய்துள்ளதையும், 500 பேரை போராட்டக்காரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளதையும் கண்டிக்கிறோம்.
ஆனால் அதே நேரத்தில் காவல் துறையை சேர்ந்தவர்கள் ஆட்டோவுக்கு தீ வைத்தது, குடிசையை கொளுத்தியது மற்றும் பல தாக்குதலில் ஈடுபட்டது, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை தாக்கியது போன்றவற்றுக்கான எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன.
மாணவர்களை, போராட்டத்தில் பங்கு பெற்றவர்களை கைது செய்திருக்கிறபோது ஏன் காவல் துறையில் சமூக விரோதிகளை கைது செய்யவில்லை? எந்த கேள்விகளுக்கும் தமிழ்நாட்டில் இன்று காவல்துறை அதிகாரிகள் தான் பதில் அளிக்கிறார்கள். அமைச்சர்கள் பதில் அளிக்கவில்லை. அமைச்சர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.
தோழர்கள் என்ற சொல்லை, சமூக விரோத சொல் என்று பகிரங்கமாக அறிவித்து இருக்கக் கூடிய கோவை மாநகர காவல் ஆணையர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் தோழர்கள் தான் முதல் மந்திரிகளாக இருந்து இருக்கிறார்கள். மத்திய உள்துறை மந்திரியாக இந்திரஜித்குப்தா இருந்து இருக்கிறார். அப்படிப்பட்ட உயர்வு மிகுந்த தோழர் என்ற சொல்லை சமூக விரோத சொல்லாக அறிவித்து இருக்கிற காவல் ஆணையர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மெரினாவில் நடந்த சம்பவத்துக்கு யார் உத்தரவிட்டார்கள். சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டாரா? அல்லது அமைச்சரவை உத்தர விட்டதா? என்ற எல்லா விவரங்களும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
மேலும் சென்னையில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் மிக, மிக கடுமையான ஒரு மாற்றத்துக்காக தன்னை தீக்கிரையாக்கி கொண்டவர் முத்துக் குமார். அவரின் தியாக உணர்வின் தொடர்ச்சிதான் சென்னை மெரினாவில் நடந்த போராட்டம்.
தமிழகத்தின் பல இடங்களில் நடந்த அந்த போராட்டம் ஓயாது. இறக்கின்ற போது முத்துக்குமார், தமிழகமே ஒன்று கூடி வறுமையில் இருந்தும், அடிமையில் இருந்தும் விடுதலை பெற்று உனது அடையாளத்தை உயர்த்து என்ற கோரிக்கையை முன்வைத்தாரோ? அந்த கோரிக்கை தான் மெரினாவில் நடந்த போராட்டம். இந்த போராட்டம் தொடரும். முத்துக்குமாரின் பெயரால் மாணவர்கள், இளைஞர்கள் இன்று வீரசபதம் ஏற்று இருக்கிறார்கள்” என்று அவர் பேட்டியளித்தார்.
இதில் தமிழ்நாடு இளைஞர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருண்சோரி, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பொறுப்பாளர் பித்தன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்க பொறுப்பாளர் பனசை.அரங்கன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பேராசிரியர் பாரி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறுதியில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றித் தெரிவித்தார்.