குழந்தைகளுக்கு உணவு இல்லாமல் பரிதவிக்கும் இலங்கை...! கைக்குழந்தைகளோடு தமிழகத்தை நம்பி வரும் ஈழத்தமிழர்கள்..

By Ajmal KhanFirst Published Apr 10, 2022, 11:00 AM IST
Highlights

இலங்கையில்  ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மக்கள் உயிர் பிழைப்பதற்காக தமிழகம் நோக்கி வர துவங்கியுள்ளனர். 

அதிகரித்து வரும் உணவு பொருட்கள் விலை

வரலாற்றில் இதுவரை இல்லாத நிதி நெருக்கடியில் இலங்கை தற்பொழுது சிக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உணவு பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும்  அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளான பால் பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.  ஒரு கிலோ பால் மாவு பாக்கெட் ஒன்றின் விலை 2,000 ரூபாயை கடந்துள்ளது. 400 கிராம் பால் பாக்கெட் ஒன்றின் விலை 800 ரூபாய் தொட்டுள்ளது. இதே போல உணவகங்களில் டீ யின் விலை 100 ரூபாயக உள்ளது. இதே போல உணவிற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ மஞ்சளின் விலை 5 ஆயிரத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ சீரகம் ஆயிரத்து 800 ரூபாயும்,  பெருஞ்சீரகத்தின் விலை 1,600 ரூபாய் ஆகும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகம் நோக்கி வரும் அகதிகள்

அதே நேரத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையும் வாங்க முடியாத விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இலங்கை மக்கள்  தவித்து வருகின்றனர். இதனால் வேறு நாட்டிற்கு சென்று உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என நினைத்து பாஸ்போர்ட் அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்துள்ளனர். அதே நேரத்தில் இலங்கையில் உள்ள தமிழர்கள் படகுகள் மூலம் அகதிகளாக தமிழகம் வர தொடங்கியுள்ளனர். இன்று மட்டும் 19 பேர் இலங்கையில் இருந்து படகுகள் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்தனர். தங்களுக்கு உண்ண உணவும், குழந்தைகளுக்கு பால் பொருட்களும் கிடைக்கவில்லையென்று வேதனை தெரிவித்தவர்கள், தமிழகத்தை நம்பித்தான் கைக்குழந்தைகளோடு வந்துள்ளதாக கூறினர்.

உயிரை பணயம் வைத்து படகு பயணம்

நாள் தோறும் தமிழகத்தை நோக்கி வரும் இலங்கை தமிழர்களை மீட்கும் கடலோர காவல்படையினர், இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தி மண்டபத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் தங்கவைத்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற போரின் போது நாள் தோறும் ஏராளமான மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்தனர். போர் முடிவடைந்த பிறகு இலங்கையில் இருந்து தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை முற்றிலுமாக நின்றிருந்தது. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உயிரை பணயம் வைத்து படகுகளில் தமிழகத்தை நோக்கி வரும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை  மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.

click me!