ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட்ட ஒரு பெண் உட்பட 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் :
தமிழக ரேஷன் கடைகளில், நான்கு குடும்ப உறுப்பினர் உள்ள அரிசி பெறும் கார்டுகளுக்கு, ஒவ்வொரு மாதமும், 20 கிலோ அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, ஐந்து கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அரிசியின் தரம் மோசமாக இருப்பதாக, மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
undefined
தரமற்ற ரேஷன் பொருட்கள் :
ரேஷனில், ஒருவர் வாங்கும் மொத்த அரிசியில், 70 சதவீதம் புழுங்கல் அரிசியும்; 30 சதவீதம் பச்சரிசியும் தரப்படுகிறது. சேமிப்பு கிடங்கில் இருந்து, தரமான அரிசியே அனுப்பப்படுகிறது; இருப்பினும், அவை தரமற்று இருப்பதாக, சில இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன. அதனால், கூட்டுறவு, உணவு வழங்கல் அதிகாரிகள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று, அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து, திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
கலப்படம் இருந்தால், அதை கண்டறிந்து, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரேஷன் பொருட்களை பொறுத்தவரை நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்துதான் அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
ரேஷன் பொருளில் கலப்படம் :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நொச்சியூரில் ரேஷன்கடையில் கடந்த புதன் கிழமை அரிசி, சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட்ட ஒரு பெண் உட்பட 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூவரும் சித்தாமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் குறித்து பரிசோதிக்கப்பட்டது. அதில் கடந்த டிசம்பருடன் காலாவதியான எண்ணெயை வழங்கியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.