நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் படகு பழுதாகி நின்ற நிலையில், அந்த படகில் இருந்த 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் அவ்வப்போது கைது செய்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு பறிபோனதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த படகுகளை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி செய்து வருகிறது. இதனிடையே கடந்த 2 மாதமாக மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் தடை காலம் முடிந்து கடந்த 15 ஆம் தேதி தான் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர்.
9 மீனவர்கள் கைது
நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 500 படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மீனவர்கள் இலங்கைக்கு அருகில் உள்ள நெடுந்தீவு பகுதியில் தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோனி என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது படகில் பழுது ஏற்பட்டு பாறையில் சிக்கியுள்ளது. இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த இலங்கை ராணுவம் எல்லை தாண்டி சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்து அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 60 நாட்கள் தடை காலத்திற்கு பிறகு மீன் பிடிக்க சென்றவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்