அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்
தோல்வியே வெற்றியின் படிக்கட்டு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதிமுக 1980, 1989, 1996, 2006 ஆண்டுகளில் தோல்விகளை சந்தித்தாலும் , அதை படிகட்டுகளாக வைத்து மீண்டும் முன்னேறி வந்துள்ளோம். கோவை மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். வாக்களித்த மக்களை நாங்கள் மதிப்போம். அதிமுக தொடந்து மக்கள் பணி செய்யும் என கூறினார்.
குறைவான வாக்குகளை வாங்கிய அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைய திட்டங்களை செய்வோம். எங்களை போன்று திட்டங்களை யாரும் செய்யவில்லை. அண்ணாமலை அதிமுகவை விமர்சனம் செய்வதை விட வேண்டும். பாஜக சார்பாக கடந்த முறை கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அப்போது அவர் வாங்கிய வாக்குகளை விட இந்த தேர்தலில் அண்ணாமலை குறைவாக தான் வாங்கியுள்ளார். நோட்டாவிற்கு கீழ்பாஜகவினர் ஒட்டு வாங்கியது இல்லையா??. என கேள்வி எழுப்பியவர், 1.5 % ஆட்சியை இழந்தோம் என தெரிவித்தார். அறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி அதிகமாக பேசியதே அண்ணாமலை தான். அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாமலைதான் என குற்றம்சாட்டியவர், இல்லை என்றால் இப்போது 30 முதல் 35 இடங்கள் கிடைத்து இருக்கும் என தெரிவித்தார்.
தலைவர் பதவியை பாருங்க..
கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான், அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மீடியா ஆதரவில் போட்டியிட்டர். பாஜக ஆட்சி தான் மீண்டும் அமைக்கிறது. எனவே வாக்குறுதி கொடுத்ததை அண்ணாமலையை கோவைக்கு செய்ய சொல்லுங்க. மோடியிடம் போனில் நேரடியாக பேசுவோம் என்றெல்லாம் அண்ணாமலை சொன்னாரே? எனவே அவர் கொடுத்த 100 வாக்குறுதிகளை செய்ய வேண்டும். அதை செய்ய சொல்லுங்க என வேலுமணி கேட்டுக்கொண்டார்.