தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய 600 கோடி.! மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே- ஷாக் தகவல்

Published : Jun 02, 2025, 07:59 AM IST
Train

சுருக்கம்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.600 கோடி நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக ரயில்வே திட்ட நிதியை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே : தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கும், புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கும் அதிகமான நிதி தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கெனவே தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புது டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக  மத்திய ரயில்வே அமைச்சர்  அஸ்வினிவ் வைஷ்ணவ் தெரிவித்தார். இதில் எட்டு புதிய ரயில் பாதைகளுக்கான தொகையான 612 கோடி ரூபாயும் அடங்கும். இதன்படி, திண்டிவனம் நகரி புதிய ரயில் பாதைக்கு 347 கோடி ரூபாய், தர்மபுரி மொரப்பூர் ரயில் பாதைக்கு 22 கோடி ரூபாய், 

மதுரை - தூத்துக்குடி ரயில் பாதைக்கு 55 கோடி ரூபாய், சென்னை -கடலூர் ரயில் பாதைக்கு 52 கோடி ரூபாய், திண்டிவனம் செஞ்சி -திருவண்ணாமலை ரயில் பாதைக்கு 42 கோடி ரூபாய், அத்திப்பட்டு புதூர் ரயில் பாதைக்கு 42 கோடி ரூபாய், ஈரோடு -பழனி ரயில் பாதைக்கு 50 கோடி ரூபாய், ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி ரயில் பாதைக்கு 4.27 இலட்சம் ரூபாய் என மொத்தம் 612 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

600 கோடி நிதியை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே

இந்த நிலையில், இந்த நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே, அதாவது நிதி ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளேயே திண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை ரயில் பாதை அமைக்கும் திட்டம், அத்திப்பட்டு - புதூர் ரயில் பாதைத் திட்டம், ஈரோடு - பழனி ரயில் பாதைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாடு அரசின் ஆர்வமின்மை காரணமாகவும், பெரும்பாலான திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளதன் காரணமாகவும் நிதி திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

நிதியாண்டு முடிவதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில், திட்டங்களின் போக்கினை இப்போதே கணித்து நிதியை திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. பொதுவாக, ஒரு நிதியாண்டின் இறுதியில் இதுபோன்ற முடிவினை எடுக்க வேண்டிய நிலையில், நிதியாண்டின் துவக்கத்திலேயே தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பது நிதி ஒதுக்கீடே ஒரு கண்துடைப்பு நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிதியை தமிழ்நாட்டிற்கே திரும்ப அளிக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நிதியை மீண்டும் பெற நடவடிக்கை எடுத்திடுக

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்திலேயே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதை திரும்பப் பெறவும், அந்த நிதியை தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக பயன்படுத்தவும் முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்